நாம் பொதுவாக வீடு கட்டுவதற்கு வாஸ்து பார்க்கிறோம். ஆனால், அந்த காலத்தில் கிராமம்வாஸ்து, மற்றும், நகர வாஸ்து, ஆலய வாஸ்து என்று, பலவிஷயங்களுக்கு வாஸ்து பார்க்கும் வழக்கம் இருந்தது. வாஸ்து சாஸ்திரத்திற்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. நம் சாஸ்திரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. முதலில் ஜாதக ரீதியாக ஒருவருக்கு வீடு அமையும் யோகம் உண்டா என்று அறிவதுதான் மிக முக்கியம். ஒருவருக்கு வீடு யோகம் இல்லாவிடில் அவரது மனைவி பெயரிலோ, தாய் - தந்தை பெயரிலோ வீடு வாங்குவது நலம் தரும்.
சாஸ்திரம் என்பது ஒரு விளக்கு. அதன் ஒளியில் சண்டையும் செய்யலாம். தெய்வீகப் புத்தகங்களும் படிக்கலாம். ஒளியில் எவ்வித தவறும் இல்லை. உபயோகப்படுத்துவதில்தான் சரியும் தவறும் உண்டாகிறது. சாஸ்திரமும் அதுபோலத்தான். சாஸ்திரங்கள் பொய்ப்பதில்லை உபயோகப்படுத்தும் முறைகளில் தவறு இருக்கலாம். அதைச் சான்றோர்கள் மூலம் சரியாக உபயோகித்தால் நிச்சயம் பலன் உண்டு. சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும்கூட முடிந்தவரை உபயோகப்படுத்தவும்.
ஐந்து நாள் திருமணம் மூன்று நாளாகி இரண்டு நாளாகி தற்போது ஒரே நாளாக பல இடங்களில் நடைபெறுவது போல் இல்லாமல், அவசியமானதை விடக்கூடாது. கருத்து வேறுபாடுகள் இருந்தால்கூட சாஸ்திரங்கள் பொய்ப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும், வீடு யோகம் உள்ளது என்று அறிந்தபின் நகரத்திலோ, கிராமத்திலோ அல்லது அவரவர் யோகத்திற்குத் தக்கபடி அடுக்குமாடி குடியிருப்பிலோ வீடுகளை வாங்கலாம். சிலருக்கு ஜாதகப்படி சிரமதசைகள் நடக்கும் பொழுது அல்லது ஆறாம் இடமாகிய கடன் ஸ்தானத்திற்கோ அல்லது எட்டாம் இடமாகிய ஆயுள் ஸ்தானத் திற்கோ அல்லது பன்னிரண்டாம் இடமாகிய விரய ஸ்தானத்திற்கோ உரிய கிரகங்களின் தசை நடந்து, அவை பிரச்சினை தரக்கூடிய ஸ்தானத்தில் இருந்தாலும் நீச்ச கிரக தசை நடந்தாலும் ஜோதிடரின் ஆலோசனை பெயரில் அவை பிரச்சினைக்குரிய தசைதான் என்று அறிந்தால், அந்த நேரத்தில் கட்டாயம் பூமி வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரப்படி வீடு அமைந்தாலும், ஜாதகப்படி வீடு யோகம் என்பது நிச்சயம் இருக்க வேண்டும். நாம் வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளை கட்டுவதாய் இருந்தாலும், தர்மத்தை ஒட்டியும் வாஸ்து அமையவேண்டும். உதாரணமாக சிலர் சாயாதோஷம் என்று அடுத்தவர் வீட்டு மரத்தின் நிழல் தன்வீட்டில் விழுகிறது என்று தன் வீட்டின் மேல்பகுதி வந்துள்ள பச்சை மரக்கிளைகளை வெட்டுவார்கள். தர்மப்படி இது தவறானது. தன்நிலம் சற்று வனைந்துள்ளது என்று அடுத்தவர் எல்லையை ஆக்கிரமித்து நேர்செய்து கொள்வது நியாயமாகாது. தர்மஸ்தாபனத்தின் இடங்களில் வாடகையோ அல்லது கிரையம் செய்யாமலோ வீடு கட்டுவது தவறு. அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் அரசாங்க நிலங்களில் வீடுகட்டிக் கொள்வது, ஆலயத்திற்குச் சொந்தமான நிலங்களில் வீடுகள் அமைத்துக் கொண்டு ஆலயங்களுக்கு நில வாடகை, செலுத்தாமல் இருத்தல், விளை நிலங்களை குடியிருப்புகளாக மாற்றுவது, ஏரி, குளம், மயானம் போன்ற இடங்களை ஆக்கிரமித்து வீடு அமைத்துக் கொள்வது. அடுத்தவர் நிலங்களைப் பொய்யான வழக்கு ரைத்து, அதை வசப்படுத்தி வீடு அமைத்துக் கொள்வது அதர்மம். வாஸ்து பகவான் தோன்றியது.
அந்தகாசுரனுக்கும், சிவபெருமானுக்கும் இடையில் யுத்தம் நடந்தபோது சிவபெருமான் திருமேனியில் இருந்து கீழே விழுந்த வியர்வையில் இருந்து ஒரு மிகப்பெரிய சக்தி வெளிப்பட்டது. அது ஒரு அசுரனாக உருமாறி உலகமெல்லாம் விழுங்கக்கூடிய அளவில் வளர்ந்தது. சிவபெருமானின் உத்தரவுப்படி அந்தகாசுரனை விழுங்கியது. பின்னர் சிவபெருமானிடம் பல அரிய வரங்கள் பெற்று அதன்பின் உலகை வருத்தக் கூடியவனாக அது மாறியது. இதனால் சிவபெருமான் அதிபலன் என்ற ருத்திரனை ஏவி அப்பூதத்தை அடக்கியதாகவும், ஒடு அதன்பின் குப்புற விழுந்த அசுரன் எழுந்து விடாமல் தேவர்கள் அவன் மேல் வசித்ததாகவும் சொல்வார்கள். தேவர்கள் பாதம் பட்டதால் வாஸ்து புருஷன் புனிதத் தன்மை அடைந்தான். சிவபெருமானிட மிருந்து உண்டானதாலும், தேவதைகள் அந்த பூதத்தின் மேல் தங்கிய தாலும் அப்பூதம் மனிதர்களால் பூஜிக்கப்படக் கூடியதாயிற்று.
‘எந்தவித பூமி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியானாலும் வாஸ்து புருஷனாகிய உன்னை பூஜித்து விட்டுதான் வேலைகளைத் துவங்குவார்கள்' என்று சிவபெருமானால் வரம் அருளப்பட்டது. இவர் மாதத்தில்குறிப்பிட்ட ஓரிரு நாள் தவிர ஏனைய நாட்களில் நித்திரையில் இருப்பார். சில கிரந்தங்களில் பூமிபுத்திரனாகவும் வாஸ்துபுருஷன் அழைக்கப்படுகிறார். விகனஸ மகரிஷியால் அருளப்பட்ட வைகானஸ் கல்ப சூத்திரத்தில் ஞான கண்டத்தில் வாஸ்து புருஷனைப் பற்றி பல தகவல்களை காணமுடிகின்றது. மேலும் ஆலயங்கள் அமைக்கும் விதம் பற்றி மரிசீ மகரிஷி விமான அர்ச்சனா கல்பம் என்ற நூலில் அழகாக விவரிக்கின்றார். வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி இன்னும் பல அரிய நூல்கள் உள்ளன. சிற்ப நகரம், சிற்பரத்தினம், மயமதம், காஸ்யபம், சர்வார்த்த மனுசாரம், வாஸ்து வித்யா போன்ற நூல்கள் சிலைவடிப்பது, ஆலயம் அமைப்பது, வீடுகட்டுவது போன்ற அரிய கலைகளைப் பற்றி விவரிக்கின்றன.
மண் பரிசோதனை: ஒரு மனை கட்டுவதற்கு இடம் வாங்குவோர் முதலில் பார்க்க வேண்டியது மண்ணின் தன்மைதான்.
1) ஒருமுழம் அகலம், ஒருமுழம் நீளம், ஒருமுழம் ஆழம் உள்ள ஒரு குழியை வெட்டி, பின் அதிலிருந்து எடுத்த முண்ணை மீண்டும் அந்தப் பள்ளத்தில் இட்டு நிரப்பும்போது மிகுதியாக இருந்தால். உத்தமமான மண் என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் வீடு கட்டுவது மிக நல்ல பலன்களைத் தரும்.
2) இவ்வாறு பள்ளத்தில் இருந்து எடுத்த மண்ணை மீண்டும் பள்ளத்தில் இட்டு நிரப்பும்போது மண் சமமாக இருந்தாலும் உத்தமமான மண் என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் வீடு கட்டுவது நல்ல பலன்களைத் தரும்.
3) வெட்டி எடுத்த மண்ணால் அந்தப் பள்ளத்தை மூடும்போது அது சமமாகாமல் பள்ளமாக இருந்தால் அது வீடு கட்ட உகந்த இடமில்லை. பிரச்சினை உள்ள இடங்களில் வீடுகளை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்துக் கொண்டாலும், அது சரியானபடி நிம்மதியைத் தருவதாக அமையாது. ஆக வாஸ்து சாஸ்திரப்படி எப்படி வீடு அமைவது என்று நாம் தீர்மானிக்கும் முன் வீடு அமையும் பூமியின் மண் தன்மையும் நன்கு அமையவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
கரையான் புற்றினை நல்ல பாம்பு ஆக்கிரமிப்பது போல் அடுத்தவர்களுடைய நிலம், பூமிகளை ஆக்கிரமித்து வீடுகட்டுவது என்பது சரியானதாகாது. வாஸ்து சாஸ்திரப்படி வீடு அமைந்தாலும், தர்மசாஸ்திரப்படி அது சரியாக இருக்காது. ஆமை, நத்தை போன்றவற்றிற்கு அவற்றின் கூடே (ஓடு) வீடாக அமைகிறது. சிங்கத்திற்கும், இயற்கையான குகைகளே வீடாக அமைகிறது. அதுபோல் அவரவர் ஜாதகப்படி யோகத்திற்குத் தக்கவாறு மிக பிரம்மாண்டமான வீடுகளோ அல்லது சாதாரணமான வீடுகளோ அமையும். ஆக வாஸ்து சாஸ்திரம் என்ற ஒன்றை மட்டும் பிரதானமாக கொள்ளாமல், ஜோதிட சாஸ்திரத்தையும் தர்மசாஸ்திரத்தையும் மிக அவசியம். இணைத்துப் பார்ப்பது தர்மசாஸ்திரப்படி சில விஷயங்களை அறியலாம். விருட்ச தோஷம் என்று பச்சை மரங்களை வெட்டுவது. வாஸ்து தோஷம் என்று நீர் உள்ள கிணறுகளை மூடுவது. மனையின் பக்கங்களைச் சரிசெய்கிறேன் என்று சகோதரர்களின்பாகங்களையோ, ஏனையோர் இடங்களையோ ஆக்கிரமிப்பது, தர்மச் சொத்துக்களைத் தன்வசப்படுத்துவது, இப்படி தர்மத்தை மீறி வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் செயல்படக் கூடாது. செய்தால் வாஸ்து வேலை செய்யாது. ஜோதிடப்படி சில விஷயங்களை அறியலாம்.
ஜாதகத்தில் நான்காம் இடத்தை நன்கு பரிசீலிக்க வேண்டும். நான்காம் பாவாதிபதியும், ஆறாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை அடைந்திருந்தால் அல்லது நான்குக்குடையவன் நீச்சனாய் இருந்து செவ்வாயும் பலம் இழந்திருந்தால் (நீச்சனாய் இருத்தல், நீச்சகிரக சேர்க்கை, பகைவீடு ஏறுதல்) ஒன்பதுக்குடையவன் பலமிழந்து அந்த கிரகத்தின் தசை நடத்தல், எந்த தசை நடைபெறுகிறதோ அந்த கிரகம் பலம் பெற்று காணப்பட்டாலும், அந்த கிரகம் நின்ற நட்சத்திர சாராதிபதி நீச்சனாய் இருத்தல். இப்படி பல விஷயங்களை ஜோதிடர்கள் மூலம் ஆராய்ந்து அதன்பின் வீடு வாங்குவதைப் பற்றி நிச்சயிக்க வேண்டும்.
வெளிநாட்டு வாஸ்துவைப் பின்பற்றலாமா? வாஸ்து என்பது நம் தேசத்திற்குத் தக்கபடித்தான் அமையவேண்டும். இதர தேசத்தின் வாஸ்து சாஸ்திரச் சட்டங்கள் நம் ஊரில் நடைமுறைப்படுத்த முடியாது. சாஸ்திரம் என்பதற்கும் சமுதாய வாழ்விற்கும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. நம் தேசத்தில்கூட வடபகுதியில் ஆலயத்தில் பூஜை செய்பவர்கள், மேல் சட்டை அணிந்தும், தலைப்பாகை அணிந்தும் பூஜை செய்கின்றனர். தென்பகுதியில் (தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பகுதியில்) ஆலய பூஜை செய்பவர்கள் மேல்சட்டை அணியாமலும், தலைப்பாகை அணியாமலும் பூஜை செய்கின்றனர். இவ்வித மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கையில் சூழ்நிலைக்கேற்பவும், சாஸ்திரங்களில் மாற்றம் உள்ளதை அறிய முடிகிறது. பணம் மட்டும் வாழ்க்கையாகாது! வாழ்க்கை என்பது நிம்மதியுடன் கூடியதாக அமைய வேண்டும். இங்கு வாஸ்துப்படி வீடு அமைந்தாலும் ஜாதக யோகங்களையும் மனதில் கொள்ள வேண்டும்.
நமது மனநிலையும், வெளிப்புறச் சூழ்நிலையும் ஒத்துப்போகும் பொழுதே சக்திமிகு ஆற்றல் நம்மிடமிருந்து வெளிப்படும். இதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதே வாஸ்து சாஸ்திரம். மனிதன் தான் தங்கும் இடத்தை வலுவானதாக இருக்கச் செய்து கொள்வதே நல்வாழ்விற்கு வழிவகுக்கும். தொழிற்சாலை போன்ற இடங்களும் வாஸ்து முறைப்படி அமையவேண்டும். பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்யும் இடம் என்பதால் அது பாதுகாப்பான இடமாக அமைவதற்கு வாஸ்து சாஸ்திரம் அவசியம் ஆகின்றது. சில வீடுகளில் இருக்கும் சிறு தோஷங்களை நீக்க அந்த இடத்தை இடிக்க வேண்டிய அவசியமில்லை. சிறிய மாற்றங்களை செய்தாலே பெரிய நல்ல பலன்களைத் அது தரக் கூடும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் இல்லாத வீடுகளையும் நல்ல ஆலோசனைப்படி மாற்றி அமைத்துக் கொண்டால், அது அதிர்ஷ்டம் தரக்கூடியதாக கட்டாயம் அந்த வீடு மாறும்.
Copyright © 2023 Om Subha Yatra. All Right Reserved. Designed by Amsonwebz.