நேபாள யாத்திரையை குழுக்களுடன் மேற்கொள்வதே எளிதானதும், நன்மை பயப்பதும் ஆகும். இந்த யாத்திரையை தனியாகவோ அல்லது இரண்டொருவர் மட்டுமோ மேற்கொள்வது அவ்வளவு பத்திரமானதல்ல. நேபாளம் குளிர் பிரதேசமாகையால் குளிரைத் தாங்குவதற்கான ஸ்வெட்டர், குல்லாய், கம்பளிச் சால்வை, காலுக்கு அணிவதற்குத் தேவையான சாக்ஸ் மற்றும் கான்வாஸ் பூட்ஸ், மழைக்கோட்டு ஆகியவற்றை எடுத்துச் சென்றால் மட்டுமே குளிரை ஓரளவு சமாளிக்க முடியும். மேலும், இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்யும் காரணத்தால் மழைக்கோட்டு அல்லது குடை ஒன்றும் எடுத்துச் செல்லுதல் நலம்.
இங்கு உள்ள கோயில் சிறிய ஒரு கட்டுமானம் தான். உள்ளே நுழைந்தவுடன் பாப தீர்த்தம் , புண்ணிய தீர்த்தம் என்று இரண்டு உள்ளது. கோயிலை சுற்றி 108 தீர்த்தங்கள் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசத்தை குறிப்பதாக உள்ளது. இந்த 108 தீர்த்தங்களில் குளித்துவிட்டு பின் பாப ,புண்ணிய குண்டங்களில் குளிக்கிறார்கள். பின் உள்ளே நுழைந்தவுடன் முக்திநாதர் தரிசனம் தருகிறார். இங்கு உள்ள கோயில் நேபாள கட்டுமானம். உள்ளே பெண் தான் பூஜை செய்கிறாள். அர்ச்சகர் வெளியே அமர்ந்து இருக்கிறார். நம்மூர் போல் இங்கு அர்ச்சனை எல்லாம் கிடையாது. பெருமாளுக்கு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார்கள். பிரார்த்தனை உள்ளவர்கள் இங்கு சிறிய மணியை கட்டுகிறார்கள். இங்கு ஒரு சின்ன யாகசாலை உள்ளது.
விமானம் மூலம் சென்றாலும் ஹெலிகாப்டர் மூலம் சென்றாலும் சில நேரத்தில் பருவ நிலை மாற்றங்களால் பயணங்கள் தடைபடுகிறது. ஜீப் அல்லது பஸ்ஸில் செல்லலாம். பாதை சற்று கடினம் தான். மழை காலங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாதைகள் தடைபடுகிறது. ஆனால் இயற்கையை ரசிப்பவர்களுக்கு பேருந்து அல்லது ஜீப் பயணம் அருமையாக இருக்கும்.
நேபால் இந்தியாவிற்கு மிக நெருக்கமான நட்பு நாடு நிறைய ஆலயங்களை காணமுடிகிறது அனைத்தும் மிக பழமையானது தற்போது மதம் கடந்து இருப்பதாக அறிவித்து இருந்தாலும் முன்பு இந்து தேசமாக தான் இருக்கிறது. பார்க்கவேண்டிய பல ஆலயங்கள் உண்டு . தரை வழியாக செல்பவர்கள் ரக்ஷோல் வழியாகவும் அடுத்து சுனோலி,பைரவா வழியாகவும் போக்ரா சென்று முக்திநாத் செல்பவர்கள் உண்டு. முக்திநாத் செல்லாமல் காட்மாண்டு பசுபதி , திரு கைலாயம் ஆலயம் , மானச ரோவர் சென்று வருபவர்களும் உண்டு.
108 திவ்ய தேசத்தில் முக்கியமானதாகக் கருதப்படுவது சாளக்கிராமம். பண்டைய பாரத தேசத்தில் அவந்தி நாடு என்றும், தற்போது நேபாளம் என்று அழைக்கப்படும் பகுதியில், அன்னபூர்ணா மலைத் தொடர்களுக்கு அப்பால், சுமார் 13800 அடி உயரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இமயமலைச் சாரலில் மிக அதிகமான உயரத்தில் இத்தலம் அமைந்துள்ள காரணத்தால் இப்பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. நேபாளத்திலுள்ள மக்கள் இத்தலத்தை 'முக்தி நாத்' ஆலயம் என்ற பெயரிலேயே அழைக்கின்றனர். முக்திநாத் என்ற ஊரிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் சாளக்கிராம க்ஷேத்திரம் அமைந்துள்ளது.விமானம் மூலம் சாளக்கிராமம் பயணத்தை மேற்கொள் காட்மாண்டுவிற்குச் செல்ல வேண்டும். காட்மாண்டுவிலிருந்து மற்றொரு விமானத்தின் மூலம் ‘போக்ரா' என்ற இடத்தை சென்றடைய வேண்டும். மறுபடியும் போக்ராவிலிருந்து மற்றொரு விமானத்தில் ஏறி 'ஜோம்ஸோம்' என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். ஜோம்ஸோமிலிருந்து முக்திநாத் (சாளக்கிராமம்) சுமார் 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த தூரத்தை குதிரைமேல் ஏறிச்சென்றோ அல்லது நடைப் பயணமாகவோ சென்றடைய வேண்டும். ஹெலிகாப்டர் மூலம், போக்ராவிலிருந்து முக்தி நாத் சென்றடையலாம்
சாளக்கிராம க்ஷேத்திரம் நேபாள நாட்டில் இருந்தாலும், இந்திய-நேபாள நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின் காரணமாக இந்தியப் பிரஜைகள் பாஸ்போர்ட், விசா போன்ற எதுவுமே இன்றி நேபாள அல்லது யாத்திரையை மேற்கொள்ளலாம்.
சாளக்கிராமம் அடை நெஞ்சே!- திருமங்கை ஆழ்வார் (988-997) பெரிய திருமொழி
1) கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய், சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து, மலை கொண்டு அலைநீர் அணைகட்டி மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன். தலை பத்து அறுத்துகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே.
2) கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும், உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான், இடம் சூழ்ந்து எங்கும் இருவிசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்* தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே.
3) உலவு திரையும் குலவரையும் ஊழி முதலா எண் திக்கும், நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறலாழி வலவன், வானோர் தம்பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன், சலம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே.
4) ஊரான் குடந்தை உத்தமன் ஒருகால் இருகால் சிலை வளைய தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வருபுனல் சூழ் பேரான் பேராயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே.
5) அடுத்தார்த்தெழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு ஆயில் வாளால் விடுத்தான் விளங்கு சுடராழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன் கடுத்தார்த் தெழுந்த பெருமழையைக் கல் ஒன்று ஏந்தி இனநிரை காத்தடுத்தான்* தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே.
6) தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுதும் உடனுண்ட வாயான் தூய அரியுருவிர் குறள் ஆய்ச் சென்று மாவலியை ஏயான் இரப்ப. மூவடி மண் இன்றே தாவென்று உலகேழும் தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே.
7) ஏனார் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை ஊனார் அகலம் பிளவெடுத்த ஒருவன் தானே இருசுடராய் வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும் தானாய் தானும் ஆனான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே.
8) வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலைக்கொண்டு உலகேழும் திரியும் பெரியோன் தான் சென்று என் எந்தாய்! சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திருமார்பில் தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே.
9) தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பின் அந்தணரும் அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகெல்லாம் வண்டார் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய தண் தாமரைகள் முகமலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே.
10) தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய் தமிழ்மாலை ஆரார் உலகத்து அறிவுடையார் அமரர் நன்னாட்டு அரசாள பேராயிரமும் ஒதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே.
Copyright © 2023 Om Subha Yatra. All Right Reserved. Designed by Amsonwebz.