Prayagraj

Prayagraj

ப்ரயாக யாத்ரை செய்வதாக நிச்சயித்தவுடன் நமது பாபங்கள் எல்லாம் விலகுகின்றன. ப்ரயாகை தர்சநம், ஸ்நாநம், கீர்த்தநம், ஸ்மரணம், இவை எல்லாம் புண்ணியம் தரக்கூடியவை.கங்கா யாத்ரை செல்வோர் ப்ரயாகை போகாமல் இருக்கக்கூடாது. ப்ரும்மா ப்ரயாகையில் யாகம்செய்து, சகல ஜீவன் களையும் படைக்கும் ஸக்தியைப் பெற்றார். மஹாவிஷ்ணு ப்ரயாகையில் ஸ்நாநம் செய்து மஹாலக்ஷ்மிக்குப் பதியானார். த்ரிபுரத்தை எரிப்பதற்குமுன் முக்கண்ணன் ப்ரியா கையில் ஸ்நாநம் செய்து சென்றார். சுக்ரனும் குபேரனும் ப்ரயாகையில் ஸ்நாந மஹிமையால் தத்தம் பதவி பெற்றனர். பரத்வாஜர் ப்ரயாகையில் தவம்செய்து ஸப்தர்ஷிகளில் ஒருவரானார். ப்ரயாகை தீர்த்த மஹிமையையும் அஸ்வமேத பலனையும் எது பெரிது என தராசில் ப்ரும்மா நிறுத்திப் பார்த்தார். அஸ்வமேததத்தைவிட ப்ரயாகை உயர்ந்தது என்ற முடிவிற்கு வந்தார்.

காசி யாத்திரை செல்வோர் இங்கிருந்துதான் சுத்த கங்கை கொண்டு வரவேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு போகும் மணலை இங்குதான் பூஜை செய்து போடவேண்டும். இதே புண்ய தீர்த்தங்களுக்கெல்லாம் தலை. ஆதலால் தீர்த்தராஜம் எனப்படுகிறது.

மஹாபாரதம், பாத்ம புராணம், கூர்ம புராணம், மாத்ஸ்ய புராணம், அக்நி புராணம், நாரத புராணம் இவைகளில் விசேஷமாக ப்ரயாகை மஹிமை வர்ணிக்கப்படுகிறது. ப்ரும்மா 100 யாகம் செய்தார் அங்கே. ஆதலால் ப்ரயாகம் புண்யம் செய்வதற்கு ஏற்ற உத்தமமான இடம் என வராஹ புராணம் வர்ணிக்கிறது.

பிரயாகையில் செய்ய வேண்டியவை

1) சங்கல்பம்
2) வேணி தானம்
3) திரிவேணி சங்கமத்தில் நீராடுதல்
4) வேணி மாதவ லிங்கத்தைச் சங்கமத்தில் நதியில் விசர்ஜனம் செய்தல்
5) கங்கை நீர் சேகரித்தல்
6) ஆலய தரிசனம்
7) நீத்தார் கடன்

கங்கையும் யமுனையும் கூடுமிடத்தில் வேணீதாநம் செய்வது இங்கு விசேஷமானது. த்ரிவேணிக்கு வேணு - (மூங்கில்) - தானம் செய்தால் ப்ரியம் என சிறிய முறத்தில் சீப்பு கண்ணாடி குங்குமச்சிமிழ் மஞ்சள் பொடி, அப்ரக்பொடி, அரிசி, வெத்திலை, பாக்கு, பழம், ரவிக்கைகுட்டை, தக்ஷிணை இவைகளை வைத்து மேலே ஒரு சிறிய முறத்தால் மூடி தானம் (வேணீ தானம்) செய்ய வேண்டும். கங்கை ஜலம் வெண்மை நிறம். யமுனையின் ஜலம் கறுப்பு. இவ்விரண்டும் கூடுமிடத்தில் ஸரஸ்வதி, அந்தர் வாஹிநியாக அதாவது வெளியில் தெரியாமல் உள்ளேயே ப்ரவாஹத்துடன் செல்கிறதாம். இவ்விடமே த்ரிவேணி என எனப்படும். சுத்த கங்கையை எடுத்துவந்து. ஸ்ரீ ராமநாதர் அபிஷேகத்திற்கும் அவரவர் பந்துக்களுக்கும் கங்கா ஸ்நாநம் செய்விக்க பெரிய பாத்ரத்திலும் வீட்டிலும் பூஜை செய்யவும் பந்துக்களிக்கவும் சிறிய பாத்ரத்திலும் கங்கை எடுத்துக் கொள்ளலாம்.

காசி யாத்திரை என்று நாம் பொதுவாகச் சொன்னாலும் பிரயாக்ராஜ் சென்று திரிவேணி சங்கமத்தில் குளித்து வேணி தானம் செய்ய வேண்டியதும், அங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும். பின் காசிக்கு வந்து காசியில் ஸ்மார்த்தர்கள் ஆக இருந்தால் பஞ்ச கங்கா காட் ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். மற்றவர்கள் தில தர்ப்பணம் மட்டும் செய்வார்கள். கயா க்ஷேத்திரத்தில் அனைவருமே பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்வார்கள். ஆக காசி யாத்திரை என்று சொன்னால் திரிவேணி சங்கமம், கங்காஸ்நானம், வாரணாசியில், கயா வில் பிண்டம், ஆகிய மூன்றும் சேர்ந்துதான் ஆனால் பெரும்பாலான வைணவர்கள் கயா சென்று சிரார்த்தம் செய்து திரும்பி விடுவார்கள்.